சீனா, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இடையேயான நெருக்கத்தை பறைசாற்றும் விதமாக, பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் (ஐஎஸ்ஐ) சேர்ந்த கர்னல் ஒருவர் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் கீழ் இயங்கும் முப்படைத் துறை தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருநாட்டுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவர், சீனாவிடமிருந்து விடுதலையும், பாகிஸ்தானில் அடைக்கலமும் கோரும் உய்கர் கிளர்ச்சியாளர்களைக் கண்காணிக்கும் வேலையில் ஈடுபடவுள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய இந்திய உளவுப் பிரிவின் (ரா) முன்னாள் கூடுதல் செயலர் ஜெயதேவ ரான்டே, "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள உய்கர் கிளர்ச்சியாளர்களின் புகலிடத்தை ஒழித்துக்கட்டச் சீனா, பாகிஸ்தானின் உதவியை எதிர்பார்க்கிறது.
சீனாவில் நியமிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐ அலுவலருக்குச் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித் திட்டத்தில் பணிபுரியும் சீன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பதவி எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை" என்றார்.
சீனாவின் தென் மேற்கு பிராந்தியமான ஜிங்ஜியாங்கில் உய்கர் எனப்படும் சிறுபான்மை இனக்குழு வாழ்ந்து வருகிறது. இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இவர்கள், சீனாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில தசாப்தங்களாக, ஆயிரக்கணக்கான உய்கர்கள் சீனாவிலிருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், இருநாட்டுக்கும் வியூக அடிப்படையில் மிகவும் முக்கியத்துவமானது.
இந்த திட்டத்துக்காகச் சீனா ஏற்கனவே 62 பில்லியின் டாலர் முதலீடு செய்துள்ளது. அங்கு பணிபுரிந்து வரும் சீன ஊழியர்களை உள்ளூர் வாசிகள் தாக்குவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளி வந்த வண்ணம் உள்ளது.
சீனாவின் முப்படைத் துறை அந்நாட்டு ராணுவத்தின் நரம்பு மண்டலம் போன்றது. இங்கு ஐஎஸ்ஐ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
(இந்த செய்தி ஈடிவி பாரத் சஞ்சிப் கேஆர் புரௌயால் எழுதியது)
இதையும் படிங்க : மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!