லாகூர்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, 100 ஆண்கள் சேர்ந்து, டிக் டாக் வீடியோ வெளியிடும் பெண்ணின் ஆடைகளை கிழித்து தாக்குதல் நடத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மினார் இ பாகிஸ்தான் பகுதியில், தனது நண்பர்கள் ஆறுபேருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது, 300க்கும் மேற்பட்ட ஆண்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், அந்தக் கும்பலின் தாக்குதலில் இருந்து, தப்பிக்க முயற்சித்து முடியாமல் போனதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
"கூட்டமாக ஆண்கள் என்னை நோக்கி வந்தனர். என் ஆடைகளை கிழித்து எறியும் அளவிற்கு என்னை இழுத்தனர். பலர் எனக்கு உதவ முயற்சித்தாலும், கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மீது லாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"டிக் டாக் வீடியோ வெளியிடும் பெண் மீது 100க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ஆண்கள் தாக்குதல் நடத்தி, மானபங்கப்படுத்தியுளளனர். மேலும், அந்தப் பெண்ணின் தோழியிடம் தங்க மோதிரம், தங்கச் சங்கிலி, 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்துள்ளது" என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பெண் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில், டிக் டாக் செயலி பலமுறை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் அடிமைத்தன அடையாளத்தை உடைக்க முயல்கிறதா தாலிபன்?