ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறை பெறுவதையடுத்து, பாகிஸ்தான் அரசு அந்நாளை இந்தியாவின் அத்துமீறல் நாளாக அனுசரிக்கவுள்ளது.
கடந்த ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்த போது காஷ்மீர் பிரச்னையில் தலையிட பாகிஸ்தான் முயற்சி செய்தது. இது உள்நாட்டுப் பிரச்னை என்று இந்தியா தரப்பில் தெரிவித்தும், பாகிஸ்தான் பல சர்வதேச தளங்களில் பிரச்னையை எழுப்பியது. கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக, ஐ.நா.பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்னை தொடர்பாக கூட்டங்களை நடத்தியது.
இந்நிலையில், ஓராண்டு நிறைவு தினத்தை இந்தியா அத்துமீறல் நாளாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வெகுஜனப் பேரணிகள், அமைதிப் பேரணிகள் ஆகியவற்றை பாகிஸ்தானின் பல பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று பாகிஸ்தான், நாடு முழுவதும் ஒரு நிமிட மெளனத்தை கடைப்பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள காஷ்மீர் நெடுஞ்சாலையின் பெயரை, ஸ்ரீநகர் நெடுஞ்சாலை என காஷ்மீர் மக்களின் ஒற்றுமைக்காக மாற்றியது.
மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததன் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 4,5) ஸ்ரீநகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.