அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் சிங்கப்பூர் சென்றுள்ள ராஜ்நாத் சிங் நேற்று இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, " நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படாமல் இருந்தது துரதிர்ஷ்டவசமானது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை நீக்கியதன் மூலம், அது தற்போது நிறைவேறியுள்ளது.
அந்த காலத்தில் நிலவிய சூழல் காரணமாகவே 370 பிரிவானது செயல்பாட்டிற்கு வந்தது. தொடக்கத்திலிருந்தே பாஜக அதன் தேர்தல் பரப்புரைகளில் ' 370ஐ நீக்குவோம், இந்தியாவை ஒருங்கிணைப்போம்' என வாக்குறுதி அளித்து வந்தது.
370ஐ நீக்கியதன் மூலம், இந்தியா மாநிலங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் ஒரு போதும் தேசியப் பாதுகாப்பையோ, தேசிய பெருமையையோ சமரசம் செய்ய மாட்டோம். அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மட்டும் நாங்கள் அரசியல் செய்ய வில்லை. நாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்கும் அரசியல் செய்து வருகிறோம்.
பாகிஸ்தான் (பரிசுத்த நாடு) என்னும் அர்த்தமுள்ள பெயரைக் கொண்டு நம் அண்டை நாடு, அதன் பெயருக்கு முரணாக நயவஞ்சகச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
370 நீக்கம்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. பின்னர், நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அம்மாநிலம், அக்டோபர் 31ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர், லாடக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக, தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் நோக்கில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும், தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் அஞ்சல் சேவை மீண்டும் தொடக்கம்!