இந்தியக் கடற்படை முன்னாள் வீரரான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவத்தால் 2016ஆம் ஆண்டு கைத்செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதனைச் சகித்துக்கொள்ளாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் நடந்துகொள்ளவில்லை என்று இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. பின்னர், குல்பூஷணைத் தூக்கிலிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
கடந்தாண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குல்பூஷண் வழக்கை நியாயமான முறையில் சீராய்ந்து, அவரின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தியத் தூதரக அலுவலர்கள் குல்பூஷணைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இச்சூழலில், கடந்த மே மாதம் குல்பூஷண் தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்காக, பாகிஸ்தான் அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது.
இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அக்தர் தலைமையில், நீதிபதி ஹாசன் ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய அமர்வு குல்பூஷண் ஜாதவ் வழக்கை விசாரிக்கவுள்ளது. இதில் ஜாதவ் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசா விண்கலம்!