குட்டி தீவு நாடான நியூசிலாந்து, பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள நாடுகளில் அடிக்கடி மிதமான நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். எனவே, இப்பகுதியிலுள்ள மக்களுக்கு நிலநடுக்கம் என்பது எப்போதும் பேரதிர்ச்சியைத் தருவதாக இருக்காது.
இந்நிலையில், நியூசிலாந்தில் ஒரு ருசிகர நிகழ்வாகத் திங்கள்கிழமை காலை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், நாடாளுமன்றத்திலிருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குக் காணொலி காட்சி வழியே பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஜெசிந்தா ஆர்டெர்ன் சற்று தடுமாறிப்போனார்.
இருப்பினும், அவர் சமாளித்துக்கொண்டே, "இப்போது இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சற்று வலுவான நிலநடுக்கம் போலத்தான் தெரிகிறது. எனக்குப் பின்னால் இருக்கும் பொருள்கள் எல்லாம் ஆடுவதை நீங்கள் பார்க்கலாம். நான் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கு மேல் எந்தவொரு விளக்கும் இல்லை, அதனால் நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
வெலிங்டன் நகரின் வடகிழக்குப் பகுதியுள்ள கடலில் 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.6ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கம் வலுவானதாக இருந்ததால் வெலிங்டன் பகுதியில் ரயில் சேவை சற்று நேரம் முடக்கப்பட்டது.
நிலநடுக்கத்திற்கு இடையேயும், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நேர்காணலைத் தொடர்ந்தார். நிலநடுக்கத்திற்கு இடையே பிரதமர் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்ற காணொலி இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: இடம் இல்லை... பிரதமரை வெளியேற்றிய உணவகம்