வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடேயே நீண்ட நாள்களாக சண்டை இருந்து வந்தது. ஆனால், சமீப காலங்களாக இரு நாட்டினரும் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வட கொரியா தென் கொரியாவுடனான அனைத்துத் தொடர்பு வழிகளையும் மூடுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வடகொரியா எல்லை நகரமான கேசிங்கிற்கு தென்கொரியாவிலிருந்து செய்யப்படும் வழக்கமான அழைப்புகள் அனைத்திற்கும் தடை விதித்துள்ளது. இதனால், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான ஹாட்லைன் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வடகொரியாவிலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் தென் கொரியாவிலிருந்து துண்டு பிரசுரங்களை அனுப்புவதைத் தடுக்காவிட்டால், அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்படும் என வடகொரியா அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இச்செயலை தடுக்காத காரணத்தினால், தென்கொரியாவுடனான அனைத்துத் தொடர்பு சேவைகளும் நிறுத்தப்படுவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார். இதையடுத்து, தென்கொரியா பல வழிகளில், வடகொரியாவை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர்.