பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஆயுதம் ஏந்திய நான்கு பிரிவினைவாதிகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த அவர்கள் (இந்தியா) திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையைப் பரப்ப அவர்கள் முயல்கிறார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
உளவுத் துறை அமைப்புகள் எச்சரிக்கையாக இருப்பதை எனது அமைச்சர்கள் அறிவார்கள். நான்கு இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும், அதில் இரண்டு இடங்கள் இஸ்லாமாபாத்தைச் சுற்றியிருப்பதாகவும் தகவல் வந்தது" என்றார்.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்குத் தொடர்புடைய மஜீத் பிரிகேட், இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் விவகாரத்தில் தலையிடும் சீனா, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை இலக்காக வைத்தே தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் போராட்டம்