இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி ரஷ்யாவிடம் சரணடைந்த நாளான மே 9, ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜெர்மனி சரணடைந்து இந்தாண்டோடு 75 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில், அதனை விமரிசையாகக் கொண்டாட ரஷ்யா திட்டமிட்டிருந்தது.
ஆனால், தீவினையாகக் கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த மாதம் 9ஆம் தேதி போர் வெற்றி தினம் மிகவும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. மேலும், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள சூழலில், இதற்காக ரஷ்யா ராணுவம் தற்போது முழுவீச்சில் பயிற்சி எடுத்துவருகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பீரங்கிகள், ஏவுகணைத் தளவாடங்கள் அணியணியாகச் சாலைகளில் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அன்று, ரெட் சதுக்கம் நோக்கி சாலைகளில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
ரஷ்யாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில், அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு ஐந்து லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆறு ஆயிரத்து 98 உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : 75ஆவது போர் வெற்றி தினம் - ரஷ்யாவில் எளிமையாக அனுசரிப்பு