டெல்லி: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பகதூர் அலி. இவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இவரை காவலர்கள் டெல்லியில் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத பரவல் தடைச் சட்டம், வெடிகுண்டு சட்டம், வெளிநாட்டினர் குடியிருப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை பாட்டியாலாவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பகதூர் அலிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். முன்னதாக இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பகதூர் அலி கைதை தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் சாத் மற்றும் தர்தா ஆகிய இரண்டு பாகிஸ்தானியர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் குப்வாராவில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகதூர் அலிக்கு ஜகுர் அஹமது பீர், நஸீர் அஹமது பீர் ஆகிய இருவரும் உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்களையும் தேசிய குற்ற புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் கைதுசெய்தனர்.
இவர்கள் மீதும் என்ஐஏ அலுவலர்கள் குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.