நியூசிலாந்து நாட்டில் அக்.17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 50 விழுக்காடு வாக்குகள் பெற்றது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தேசிய கட்சி 27 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது. மொத்தம் உள்ள 120 இடங்களில் 60 இடங்களை கைப்பற்றி ஜெசிந்தா ஆர்டனின் கட்சி அமோக வெற்றி பெற்றது.
நியூசிலாந்து வரலாற்றில் தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது இதுவே முதன்முறையாகும். இதனையடுத்து வெலின்டனில் இன்று நடைபெற்ற விழாவில் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இரண்டாம் முறையாக ஜெசிந்தா ஆர்டன் பதவியேற்றுக்கொண்டார்.
முன்னதாக, தேர்தல் வெற்றி குறித்து ஆக்லாந்தில் தனது வீட்டின் முன் உரையாற்றிய ஜெசிந்தா ஆர்டன், "கரோனா பரவலை தடுக்கவும் பொருளாதாரத்தை மீட்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் எங்கள் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என்றார்.
வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றம் திறக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வலதுசாரிகளுக்கு மத்தியில் தோன்றிய இடதுசாரி மக்கள் தலைவர் ஜெசிந்தா!