கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் நிலையில், மிக விரைவில் அந்த அச்சுறுத்தல்கள் அனைத்தையும் முறியடித்து, கரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்ட நாடாக நியூசிலாந்து திகழ்கிறது.
இந்நிலையில், இன்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான டேவிட் கிளார்க் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”கரோனா வைரசிலிருந்து நாட்டை மீட்க என்னால் முடிந்த பணிகளைச் செய்தேன். ஆயினும், நான் ஒரு முட்டாள். நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நேரத்தில் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நான் சில தவறுகளைச் செய்துள்ளேன். நான் ஒரு சாதரண சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க விரும்புகிறேன். அதனால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்றார்.
முன்னதாக, இவர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து நியூசிலாந்து நாட்டிற்குத் திரும்பிய சிலருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளாமலே, நாட்டிற்குள் அனுமதித்த சம்பவமும் மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமைச்சரின் இச்செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், ”சுகாதாரத் துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்யலாம். இருப்பினும், மக்கள் பலர் தற்போது கரோனா வைரசுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் இவ்வேளையில் அந்த முடிவை எடுக்கவில்லை” என்றார்.
ஆனால், தற்போது ஜெசிந்தா டேவிட் கிளார்க்கின் ராஜிநாமாவை ஏற்பதாகவும், நாட்டின் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் மக்கள் உறுதியுடன் செயல்படும் வகையில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், கல்வி அமைச்சர் செரிஸ் ஹிப்கின்ஸை சுகாதாரத் துறை அமைச்சராகத் தற்காலிகமாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்.