நேபாள நாட்டின் வரைபடத்தை திருத்துவதற்கு அரசாங்கம் தாக்கல் செய்த முக்கிய அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து விவாதிக்க நேபாள நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று தொடங்கியது.
இந்தத் திருத்த மசோதா குறித்த விவாதங்கள் முடிந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பாராளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ரோஜ்நாத் பாண்டே தெரிவித்தார். புதிய வரைபடத்துக்கு பெரும்பாலான கட்சிகள் வரவேற்பை அளித்துள்ளன.
புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மசோதாவை பரிசீலிக்கும் திட்டத்ததுக்கு ஜூன் 9ஆம் தேதி நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. மேலும், இப்பகுதிகள் தொடர்பான வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் சேகரிக்க அரசாங்கம் புதன்கிழமை ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
வரைபடம் ஏற்கனவே வெளியிடப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டபோது ஏன் பணிக்குழு உருவாக்கப்பட்டது என்று அரசியல் விமர்சகர்கள், வல்லுநர்கள் கேள்வி எழுப்பினர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள சாலையை திறந்து வைத்ததை அடுத்து இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கருத்துமோதல்கள் தொடங்கிவிட்டன.
சாலை திறக்கப்பட்டதையடுத்து அந்தசாலை முழுவதும் நேபாள நாட்டு எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியது. இந்தக் கருத்தை இந்தியா நிராகரித்தது.
வரலாற்று உண்மைகள், ஆவணங்களின் அடிப்படையில் இந்தியாவுடனான உரையாடல்கள் மூலம் இப்பிரச்னைக்கு தனது அரசாங்கம் தீர்வு காணும் என்றும் இந்தியா ஆக்கிரமித்துள்ள நிலத்தை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்றும் சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தின் பிரதமர் ஒலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.