ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள வனவிலங்குகளின் மீதான பேரழிவுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இயற்கைக்கான உலகளாவிய நிதியம் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் லில்லி வான் ஈடன், கிறிஸ் டிக்மேன் ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், நியூகேஸில் பல்கலைக்கழகம், சார்லஸ் ஸ்டர்ட் பல்கலைக்கழகம், பேர்ட்லைஃப் ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்ந்த பத்து அறிவியலாளர்கள் இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட வன உயிர்களின் உயிரிழப்பைக் காட்டிலும் தற்போது மூன்று மடங்கு அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது..
ஏறத்தாழ 14.3 கோடி பாலூட்டிகள், 246 கோடி ஊர்வன உயிரினங்கள், 18 கோடி பறவைகள், 5.1 கோடி தவளைகள் என சுமார் 300 கோடி வன உயிர்கள் காட்டுத்தீயில் அழிந்துவிட்டதாக இந்த ஆய்வு சொல்கிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நிதியத்தின் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அலுவலர் டெர்மட் ஓ. கோர்மன், "இந்த இடைக்கால ஆய்வின் அறிக்கைகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
காட்டுத்தீயால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலகின் வேறெங்கும் நடந்திராத ஒன்றாகவே உள்ளது. நவீன வரலாற்றில் மிக மோசமான வனவிலங்குப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆய்வானது உலகையே உறைய வைக்கும் என்பது சந்தேகம் இல்லை" என்றார்.