தாக்கா: வங்கதேசத்தில் கமிலா என்ற பகுதியில் உள்ள இந்து கோயிலில் தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா பூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோயிலுக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த வன்முறை சம்பவம் அண்டை பகுதிகளுக்கும் பரவ, அது கலவரமாக மாறியது. இதில் இரண்டு இந்துக்கள் உயிரிழந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற மதவாத தாக்குதல்களை மேற்கொள்பவருக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா கண்டனம் தெரிவித்தார்.
சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்
இதன்பின்னர், இஸ்லாம் மதத்தின் புனித நூலான குரானை இந்து சாமி சிலையின் காலடியில் வைத்த ஒரு புகைப்படம் ஒன்று அங்கு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதை எதிர்த்து தலைநகர் தாகாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று (அக். 17) முக்கிய பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள வீதியில் அமர்ந்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
இருதரப்பும் போராட்டம்
இதுகுறித்து, வங்கதேச இஸ்லாமிய இயக்கத் தலைவர் பில்லாஹ் அல் மதனி கூறுகையில், "கமிலாவில் குரான் நூலை அவமதித்தவர்களை கைது செய்யவேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
அந்த புகைப்படத்தை வெளியிட்டவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதேபோன்று, இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஆயிரக்கணக்கான இந்துகளும், கமிலா கோயில் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கும், தொடரும் இந்து கோயில்கள் மீதான தாக்குதலையும் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மிக விமரிசையாக கொண்டாடும் துர்கா பூஜை பண்டிகை நேரத்தில், மதவாத மோதல்கள் ஏற்படும் சூழல் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.