பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த சாஹிதா கலீல் என்ற பெண், இந்தியாவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பங்கஜ் பாஃப்னாவுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ரக்ஷ பந்தன் தினத்தையொட்டி ராக்கி கயிறு அனுப்பிவருகிறார். இவர்களின் அண்ணன், தங்கை பாசம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்துப் பேசிய பங்கஜ் பாஃப்னா, "நான் தினந்தோறும் சாஹிதா அனுப்பிய பார்சலுக்காக காத்திருந்தேன். அவ்வப்போது, கொரியர் அலுவலகத்திற்குச் சென்று விசாரிப்பேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய சாஹிதா கலீல், "எனது உறவினர் திலீப் கானின் நண்பர்தான் பங்கஜ். நீண்ட நாள்களாக இந்தியா வரமுடியாமல் தவித்துவந்தேன். 2013ஆம் ஆண்டில் கராச்சியிலிருந்து புதுடெல்லிக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது சகோதரனுக்கு நேரில் ராக்கி கயிறு கட்டினேன். அதேபோல் இந்தாண்டும், மத்தியப் பிரதேசத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக பயணிக்க முடியாமல் போயிற்று. வேறுவழியின்றி கொரியரில் ராக்கி கயிறு அனுப்பினேன்" எனத் தெரிவித்தார்.
பங்கஜின் உடன்பிறந்த சகோதரியான நம்ரதா லோதா இதுகுறித்துப் பேசுகையில், "எனது சகோதரருக்கும் ஷாஹிதாவுக்கும் இடையிலான அன்பு அனைவருக்கும் ஒரு நல்ல உதாரணம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் நல்லுறவுடன் இருக்க வேண்டும்" என்றார்.