கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
1.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பியாவிலேயே மிக முக்கிய நகரமாகக் கருதப்படும் மாஸ்கோவில் மட்டும் இதுவரை 1,836 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 300 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
100- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட மாஸ்கோவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பெருள்கள் கிடைக்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்தையும் மூட மாஸ்கோ நகரின் மேயர் செர்ஜி சோபியானின் உத்தரவிட்டுள்ளார்.
வைரஸ் பரவலுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின், "மக்கள் உணவு வாங்குவது, மருத்துவப் பொருள்கள் வாங்குவது போன்ற அவசர தேவைகளுக்கு மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரலாம். அத்தியாவசிய துறைகளில் பணிபுரிபவர்கள் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வந்து பணிபுரிந்தால் போதும்" என்றும் கூறினார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களும் மாஸ்கோவில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாகாண ஆளுநர்களையும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: புடினுக்கு கைகொடுத்த மருத்துவருக்கு கரோனா: அதிர்ச்சியில் ரஷ்யா!