கம்போடியா நாட்டில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 19 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதில் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதில், 42 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கம்போடியா மக்களுக்கு இந்தியா சார்பில் வெள்ள நிவாரண கிட் உள்பட 15 டன் வெள்ள நிவாரண பொருள்களை இந்திய கடற்படையின் கில்டன் கப்பலில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்திய கடற்படைக் கப்பல் கில்டன் செவ்வாய்க்கிழமை (டிச. 29) கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை அடைந்தது. இதனையடுத்து நேற்று (டிச.30) வெள்ள நிவாரண பொருள்களைத் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவிடம் இந்தியா ஒப்படைத்தது.
இந்நிலையில் வெள்ள நிவாரணம் பொருள்களை வழங்கிய இந்தியக் கடற்படைக் கப்பல் கில்டன் கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டது.
இந்தியாவும் கம்போடியாவும் வலுவான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. தற்போதைய இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
சாகர் மிசன் 3 திட்டத்தின் கீழ் மனிதநேய அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று கடந்த வாரம் வியட்நாம் நாட்டுக்கும் 15 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி இருந்தது.