சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய வழக்கில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் தான் இந்திய வம்சாவளியான மலேசியர் நாகேந்திரன்.
மொத்தம் 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அதிபருக்கு எழுதிய கருணை மனுவும் ரத்து செய்யப்பட்டது.
மரண தண்டனையை நிறைவேற்றும் வரை, நாகேந்திரனின் குடும்பத்தினர், அவரை தினமும் வந்து சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவும் சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இணையவழியில் பெருகிய ஆதரவு
இச்சூழலில், நவம்பர் 10ஆம் தேதி நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி வெளியானது. உடனடியாக அவருக்கு ஆதரவாக அக்டோபர் 29ஆம் தேதி, அதிபரின் கருணை மனுவுக்காக இணைய வழி பரப்புரை தொடங்கப்பட்டது. இதற்கு இதுவரை 39,962 பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த நபரால் போதைப்பொருள் கடத்தலுக்கு வற்புறுத்தப்பட்டதாக நாகேந்திரன் வாக்குமூலம் அளித்ததால் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு அறிவுத்திறன் குறைபாடு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர் வன்முறையற்ற குற்றத்தை செய்துள்ளதால், அவரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: தடுப்பூசி போட மறுக்கும் அமெரிக்க உளவுத்துறை அலுவலர்கள்!