ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தின் தலைநகரான கார்டெஸ் நகரில் நேற்று (மே 14) காலை 8.30 மணியளவில் லாரியின் மூலமாக நடத்தப்பட்ட குண்டுவெடி தாக்குதலில் 5 பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உள்பட 46க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்த மாகாணத்தின் ராணுவ நீதிமன்றம், நிதி, வரி அலுவலகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமாகின. குண்டுவெடிப்பு நடைபெற்ற கார்டெஸ் நகரே சாம்பல் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இது தொடர்பாக மாகாண அலுவலர் சின்குவா கூறுகையில், "பாதுகாப்பு அமைச்சகத்தின் மாகாண இயக்குநரகத்தை தாக்கும் எண்ணத்தில் நிகழ்த்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்த வந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்த வந்த நபர் லாரி குண்டை வெடிக்கச் செய்தார்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன், இந்தத் தாக்குதலுக்கு தலிபானின் ராணுவப் பிரிவான ஹக்கானி குழு மீது குற்றம் சாட்டினார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட தகவல்களின்படி, அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து தலிபான்கள் 3,712 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அதில் 469 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அணு ஆயுதத் திட்டத்திற்காக வடகொரியா செலவுசெய்த தொகை இத்தனை கோடியா...!