காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால், இந்திய அரசு அதன் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதனையடுத்து, பி3 நாடுகள் என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சிறுநீரக பிரச்னை காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் டயாலிசிஷ் சிகிச்சை பெற்றுவருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ராவல்பிண்டி மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் மசூத் அசார் உட்பட பத்து பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஆசன் உல்லா மியாகைல் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு எந்த செய்தியும் வெளியிடவில்லை. மேலும், இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்தும், மசூத் அசார் குறித்தும் ஊடகங்கள் செய்திகள் வெளியிடக்கூடாது என பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் உளவுத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ராவல்பிண்டி மருத்துவமனையின் காணொளிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி சந்தேகத்தை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது மசூத் அசார் மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.