ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ அந்நாட்டு அரசின் வேண்டுகோளை ஏற்று தாலிபன் அமைப்பு போர் தாக்குதலைக் கைவிட வேண்டும் என அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலில்சத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அன்மையில் தாலிபனுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், இரு பிரிவினரும் வன்முறையை விடுத்து போர் குற்றவாளிகளை விடுவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கரோனா வைரஸ் தொற்று காலத்தில் தாலிபன் தாக்குதல் நடத்துவதை அவசியம் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தாலிபன் அமைதி ஒப்பந்தத்தையடுத்து, ஆப்கன் சிறையிலிருக்கும் தாலிபன் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அந்த அமைப்பு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. மொத்தமுள்ள ஐந்தாயிரம் கைதிகளில் ஆயிரத்து 500 கைதிகளை நிபந்தனையின்பேரில்தான் விடுவிக்க முடியும் என ஆப்கன் அதிபர் அஸ்ரஃப் கனி தெரிவித்தார். இதையடுத்து, ஆப்கன் படைகள் மீது தாலிபன் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக, ஆப்கன் தவித்துவரும் சூழலில் தாலிபன் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனப் போர் நிறுத்தத்திற்கு அதிபர் கனி வேண்டுகோள்விடுத்தார். ஆனால், தாக்குதலை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள தாலிபன் அமைப்பு, தங்கள் சிறைக் கைதிகளை வெளியேவிட்டு பாதுகாப்பை உறுதிசெய்தால்தான், தாக்குதலை நிறுத்துவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தளர்த்தப்படும் ஊரடங்கு - தரவுகள் கூறுவது என்ன?