டோக்கியோ: தற்கொலை எண்ணம் கொண்டவர்களை ட்விட்டர் வாயிலாக கண்டறிந்து அவர்களுடன் நட்புறவுடன் பழகி, கொலை செய்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகஹிரோ ஷிராய்ஷி (30) எனும் நபருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், ட்விட்டர் வாயிலாக தற்கொலை எண்ணம் கொண்டவர்களை கண்டறிந்து அவர்களுடன் நட்புடன் பழகி, அவர்கள் இறப்பதற்கு உதவி செய்வதாக உறுதியளித்து தனது வீட்டிற்கு அழைத்து கொலை செய்தது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததும் அம்பலமானது.
இதுவரை ஒன்பது பேரை கொலை செய்திருப்பதும், அதில், 8 பேர் பெண்கள், ஒருவர் ஆண் என்பதும் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. தகஹிரோ மீதான வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கொலைக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், இந்த குற்றத்திற்கு தகஹிரோவே முழு காரணம் என நீதிபதி நவ்குனி யானோ தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் சமூக ஊடகங்கள் மீதான ஒரு வித அச்சத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அந்நபருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி நவ்குனி தீர்ப்பளித்தார்.
அதிகளவு தற்கொலைகள் நடைபெறும் நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ள நிலையில், கரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டு மேலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. முன்னதாக இதேபோன்று கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊனமுற்றோர் இல்லத்தின் ஊழியர் ஒருவர் 19 பேரை கொலை செய்து, 20 பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியுங்கள், இடைவெளிவிட்டு நில்லுங்கள் - அசத்தும் ஜப்பான் ரோபோட்