2017ஆம் ஆண்டு வரை, வட கொரியாவை அணு ஆயுத சோதனைகள் தொடர்பாக ஜப்பான் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்தார்.
இது தொடர்பாக, அமெரிக்காவுடன் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், இரு நாடுகளுக்கிடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. இத்தகைய சூழலில், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை, கிம் ஜாங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இம்மாத முதல் வாரத்தில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, கிம் உடன் மனம் திறந்து பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக வட கொரியா எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
வடகொரியா இரண்டு அணு ஆயுத சோதனை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் தொடர்ந்து முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கிம் ஜாங் உன்னை, ஷின்சோ அபே சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.