ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானியான மொஹ்சென் பக்ரிசாதே நேற்று (நவ. 27) படுகொலைசெய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கே உள்ள அப்சர்த் என்னும் கிராமத்தின் வழியாக அவர் காரில் பயணம் செய்யும்போது அவரை ஒரு கும்பல் சுட்டுக்கொன்றது.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் இஸ்ரேல் அரசு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. குறிப்பாக, இஸ்ரேலின் உளவுத் துறையான மோசத் அமைப்புதான் இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளதாகப் பரவலாகக் கூறப்படுகிறது.
ஈரான் நாட்டின் அணு ஆயுத முன்னெடுப்புகளைத் தீவிரமாக இஸ்ரேல், அமெரிக்கா எதிர்த்துவருகிறது. இந்தச் சூழலில், ஈரானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அணு விஞ்ஞானியின் இந்தப் படுகொலைக்கு ஈரான் அரசு தீவிர எதிர்வினையாற்றியுள்ளது. குறிப்பாக, அந்நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மத குருவான அயத்தோல்லா அல் காமேனி இந்தப் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூத்த விஞ்ஞானியின் படுகொலையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் பழிதீர்க்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி இஸ்ரேல் நாடுதான் இந்தப் படுகொலைக்குப் பின்னணியிலிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சோமாலியா தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு