அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவலர் ஒருவரால் சர்ச்சைக்குரிய விதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்வத்தின் எதிரொலியாக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் அதிபர் ஹாசன் ரவ்ஹாணி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”ஃப்ளாய்ட் மிகக்கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் தங்கள் உணர்வுகள், உரிமைக்காக தெருவில் இறங்கிப் போராடும் அமெரிக்கர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போராட்டக்காரர்களைக் கடுமையாக ஒடுக்கிவிட்டு, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் பைபிளுடன் நிற்பது போல புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு நீண்ட நாள்களாகவே நிலவிவருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ச்சிப் போராட்டம் நடைபெற்றபோது, அங்கு அரசு மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது ஈரான் அதிபர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அல்-கய்தாவுடன் தலிபான் தொடர்பில் உள்ளது - ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்!