அமெரிக்கா - ஈரான் இடையேயான உறவு சமீபகாலமாகச் சிக்கலில் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அது மேலும் மோசமடைந்தது. ஈரான் நாட்டு ராணுவத் தளபதி அமெரிக்கப் படையினரால் ஈராக்கில் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரத் தாக்குதல் நடத்தி மோதல் போக்கை வெளிப்படுத்தின.
அமெரிக்கா அடுத்தக்கட்டத்திற்குச் சென்று ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. ஈரான் முறையற்றவிதமாக அணுசக்தி ஆய்வுகளை நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.
ஈரானின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே நம்பியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானின் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தச் சிக்கலிலிருந்து மீண்டுவர ஈரான், அமெரிக்காவிடம் முக்கியக் கோரிக்கையை தற்போது வைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவுக்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பாதிப்பால் கடும் நெருக்கடியில் உள்ள அந்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்யமுடியாத சூழல் உள்ளதாகவும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை உடனடியாக விலக்கிக்கொண்டால்தான் நிலைமையை ஓரளவு சமளிக்க முடியும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் இந்தப் பொருளாதார பயங்கரவாத நடவடிக்கையை எதிர்காலத்திலும் மேற்கொள்ளக் கூடாது எனவும் ஈரான் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கொரோனா நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் இணைந்து செயல்படவேண்டும்'