நவீன செவிலியப் படிப்பை நிறுவிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200ஆவது நினைவு தினம் இன்று (மே 12). சுகாதாரத் துறையில் செவிலியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய-சர்வதேச சுகாதார நலன், மனநலன் மற்றும் அவசர நெருக்கடி காலங்களில் பணிபுரியும் செவிலியர்களின் நிலை சிரமமானதும் கூட...
செவிலியப் படிப்பின் வரலாறு
பண்டைய காலம் தொடங்கி 17ஆம் நூற்றாண்டு வரை முறையான செவிலியப் படிப்பு இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஒவ்வொரு கிராமத்திலும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனை கவனித்துக் கொள்ள மூதாட்டி அல்லது முதியவர் யாரேனும் இருப்பார்கள். 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் அறிமுகம் செய்த ராணுவத் துறையில் செவிலியப் படிப்புதான் நவீன செவிலியப் படிப்பின் முன்மாதிரி எனலாம்.
1871ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசு பொது மருத்துவமனையில் 4 மாணவர்களுடன் செவிலியப் படிப்பு தொடங்கப்பட்டது.
18 - 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே மிஷன் மருத்துவமனைகளால் செவிலியப் படிப்புக்காக பல்வேறு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
சர்வதேச செவிலியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகளவில் 10 ஆயிரம் நபர்களுக்கு 36.9 செவிலியர்கள் உள்ளனர், இது அந்தந்த பகுதிகளுக்கேற்ப மாறும்.
ஆப்பிரிக்காவை ஒப்பிடும்போது அமெரிக்காவில் 10 மடங்கு அதிக செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த அறிக்கையின்படி, 2030ஆம் ஆண்டு உலகளவில் 57 லட்சம் செவிலியர்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
தென்-கிழக்கு ஆசியப் பகுதியில்தான் செவிலியர்கள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பாவில் வேறுவிதமான பிரச்னை, அங்கு செவிலியர்கள் முதுமையடைந்தவர்களாக இருப்பார்கள்.
ஐரோப்பா, கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் அமெரிக்காவிலுள்ள அதிக வருவாய் ஈட்டும் நாடுகள், புலம்பெயர் செவிலியர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கரோனா சூழலில் செவிலியர்களின் பங்களிப்பு:
சீனா: கரோனா சூழலில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர்கள் ஹூபே மாகாணத்துக்கு சென்று பணிபுரிவதாக சர்வதேச செவிலியர்கள் அமைப்பு (ஐசிஎன்) தெரிவிக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவையால் இதுவரை 44 ஆயிரம் கோவிட்-19 நோயாளிகள் உடல்நகம் தேறி வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் கரோனாவுக்கு எதிரான போரில் செவிலியர்கள் முன் வரிசையில் நிற்கின்றனர். மருத்துவர்களும் செவிலியர்களும் கரோனா போரில் வெற்றிபெற அயராது உழைக்கின்றனர். சுகாதாரப் பணியாளர்கள் இல்லை என்றால் நாம் மிக மோசமான பாதிப்பை சந்தித்திருப்போம். செவிலியர்களை இந்தப் பணியின் முதுகெழும்பு எனலாம்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் 30 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர். 1000 நோயாளிகளுக்கு 1.7 என்ற விகிதத்தில் செவிலியர்கள் உள்ளனர். இது 3ஆக இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
கரோனா சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்கப்படாத போதும் பணியில் ஈடுபட்டனர். குடும்பத்தைப் பிரிந்து மக்கள் நலனுக்காக பணிபுரியும் அவர்களின் நிலை இந்தியாவில் மோசமானதாக உள்ளது. தகாத வார்த்தைகளால் வசைபாடப்படுவதுடன், சில நேரங்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக செவிலியர்கள் தங்கள் குறைந்தபட்ச ஊதியத்துக்காக போராடிவருகின்றனர்.
2019 ஜூலை, டெல்லி தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க, செவிலியப் படிப்பு, பணிகளில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும். அனைத்து விதமான தொழிலாளர் சந்தையின் நிலையைப் பொறுத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
மக்களுக்கான சுகாதாரப் பணியில் தன்னலமற்று பணிபுரிந்து உயிரை விட்ட செவிலியர்களும் இங்கே ஏராளம். உதாரணத்துக்கு கேரளாவைச் சேர்ந்த லினி புதுசேரியைச் சொல்லலாம். நிஃபா வைரசுக்கு எதிரான போரில் பணியாற்றி உயிரை விட்டார். அவருக்கு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது.
இந்த சர்வதேச செவிலியர்கள் தினத்தில் அவர்களின் சேவையை போற்றுவோம், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்போம்...