இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்தாவில் சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட சோதனையின் போது பயங்கரவாதிகளை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அடுத்த வாரம் அங்கு அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதைச் சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெஏடி என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களான இவர்கள், கடந்த 4 மாதங்களாக சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 68 பேரில் பல பயங்கரவாதிகள் சிரியாவுக்குச் சென்று நேரடியாகப் போர் பயிற்சி மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது. வரும் 22ஆம் தேதி இந்தோனேசியாவில் தேர்தல் அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில் இதை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.