இந்திய ராணுவத் தளபதி நரவணே, நேபாளத்தின் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஓலி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு பலுவதாரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்தது என்று நேபாள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய ராணுவ தளபதி நரவணே நேபாளம் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது, காத்மாண்டுவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிவபுரியில் உள்ள ராணுவ கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் மாணவர், அலுவலர்கள் இடையே ராணுவத் தளபதி உரையாற்றினார். அப்போது, அவர் தனது அனுபவத்தை மாணவர் அலுவலர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
வியாழக்கிழமை, நரவணேவுக்கு ‘நேபாள ராணுவ தளபதி’ என்ற கவுரவ பதவியை அதிபர் பித்யா தேவி பண்டாரி வழங்கி சிறப்பித்தார். இது இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான வலுவான உறவுகளைப் பிரதிபலிக்கும் பல தசாப்தங்களாக பழமையான பாரம்பரியமாகும்.
இரு நாட்டு உறவில் உரசல்கள் எழுந்திருக்கும் நிலையில் இந்திய ராணுவ தளபதி நரவணேவின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மீண்டும் முந்தைய இணக்கமான சூழலை கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி, மே மாதத்தில் நேபாளம் ஒரு புதிய அரசியல் வரைபடத்தைக் வெளியிட்டது. இதன்காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சிக்கலுக்குள்ளானது. இதன்பின்னர், இந்தியாவில் இருந்து காத்மாண்டுக்கான முதல் உயர்மட்ட விஜயம் இதுவாகும்.
மே 8 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தர்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்ததற்கு நேபாளம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
நேபாளம் வரைபடத்தை வெளியிட்டதற்கு, இது ஒரு "ஒருதலைப்பட்ச செயல்" என்று கூறி,தனது எதிர்ப்பை பதிவுசெய்த இந்தியா, காத்மாண்டுவை எச்சரித்தது. பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு நடவடிக்கை நேபாளம் மீறுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
மியான்மர், மாலத்தீவு, பங்களாதேஷ், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடனான உறவைப் புதுப்பிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக ராணுவத் தளபதியை நேபாளத்திற்கு இந்தியா அனுப்பிவைத்துள்ளது.