ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குட்டெரெஸ் இந்தியா மீதும், பாகிஸ்தான் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்றும் இரு நாடுகளில் நிலவும் பிரச்னைகள் முடிவுக்கு வரத் தகுந்த சந்தர்ப்பங்கள் அமையுமென குட்டெரெஸ் எதிர்பார்த்துள்ளதாக ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாக ஸ்டீபன் கூறியுள்ளார். முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜி7 மாநாட்டில் நேரில் சந்தித்து இது குறித்து குட்டெரெஸ் பேசியிருப்பதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியையும் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்த ஸ்டீபன், விரைவில் இதற்குத் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளைத் துண்டித்துக்கொண்டது. மேலும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் நோக்கில் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றுவருகிறது.

இது குறித்து ஐநா மன்றத்தில், “ஜம்மு-காஷ்மீர் ஒரு கூண்டிடப்பட்ட சிறையாக மாறியுள்ளது” எனப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியிருந்தார்.

இதை மறுத்து, “மனித உரிமை என்ற பெயரில் பாகிஸ்தான் தீங்கிழைக்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது” என வெளியுறவுத் துறை செயலர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் பேசியிருந்தார். இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது குறித்து, சர்வதேச அளவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.