இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "அண்டை நாடுகளுடன் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே வங்க தேசத்தின் எண்ணமாக உள்ளது.
ஒவ்வொரு பிரச்னையையும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியா-வங்க தேசம் இடையே பல பிரச்னைகள் பரஸ்பர பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்க்கப்பட்டுள்ளன.
வங்க தேசம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாதான் எங்களின் மிக நெருக்கமான நட்பு நாடு. சீனாவும் எங்கள் நட்பு நாடுதான்.
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்னைகளில் வங்க தேசம் தலையிடுவது சரியாக இருக்காது. அமைதியான முறையில் பிரச்னைக்குத் தீர்வு காண இருநாடுகளும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
ராணுவ-தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என நம்புகிறோம். கல்வான் மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
ஆனந்தபஜார் பத்ரிகா என்ற பெங்காலி செய்தித்தாளில் வெளியான சர்ச்சைக்குரிய செய்தி குறித்துப் பேசிய அவர், "சீனாவுக்கு நாங்கள் ஏற்றுமதி செய்யும் 97 விழுக்காடு பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இந்த விலக்கானது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு சீனா, வங்கதேசத்துக்கு கொடுக்கும் 'தானம்' என ஆன்ந்தபஜார் பத்ரிகா செய்தித்தாளில் வெளிவந்த செய்தி அனைவரின் மனத்தையும் புண்படுத்தியுள்ளது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஞாயிற்றுக்கிழமையே சொல்லிவிட்டேன்.
தற்போது அந்தச் செய்தித்தாள் அதன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அவர்கள் உணர்ந்ததற்கு நன்றி.
இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடு வங்கதேசம் என்பதை அவர்கள் உணருவார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.
ஜூன் 20ஆம் தேதி ஆனந்தபஜார் பத்ரிகாவில் வெளிவந்த செய்தியில், வங்க தேசத்துக்குச் சீனா தானம் அளித்து இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டைத் தூண்டிவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியதை அடுத்து மறுநாளே அந்தப் பத்திரிகை அதன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!