கரோனா வைரஸ் எனப்படும் 2019-nCoV காரணமாக சீனாவில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியது. வைரஸ் பாதிப்பு காரணமாக உஹான் நகரம் முற்றிலும் முடங்கியுள்ளது.
உஹான் பகுதியிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 500 இந்தியர்கள் வரை படித்துவருகின்றனர். ஆனால், சீன புத்தாண்டு விடுமுறை காரணமாக பெரும்பாலான இந்தியர்கள், வைராஸ் பாதிப்பிற்கு முன்னதாகவே உஹான் நகரைவிட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் 45 இந்தியர்கள் வரை உஹான் நகரில் சிக்கியிருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் தூதரங்களில் பதிவு செய்வதில்லை என்பதால், எத்தனை பேர் அங்கு சிக்கியுள்ளனர் என்று உறுதிப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
உஹான் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகரில் வாழும் 11 மில்லியன் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - மருந்து தயாரிக்கும் பணிகளில் சீனா மும்முரம்!