இந்தியப் பிரமராக இரண்டாம் முறை பொறுப்பேற்றபின் பிரமதர் மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மகிழ்ச்சியுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டுப் பிரதமர்களும் இரு நாடுகளுக்கும் இடையே 'பொது ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தை'த் தொடங்கி வைத்தனர்.
இரு நாடுகள் உறவு குறித்து பேசிய பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங், இரு நாடுகளுக்கும் பூகோள ரீதியாக மட்டும் நெருக்கம் இல்லை, மனதளவிலும் இரு நாடுகளும் நெருக்கமானவை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், நிலப்பரப்பில் வேறுபட்டிருந்தாலும் இரு நாடுகளின் எண்ணம், குறிக்கோள் பொதுவானவையே. உண்மையான நட்பிற்கு இரு நாடுகளும் இலக்கணமாகத் திகழ்கிறது எனவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய பிரதமர் மோடி, பூட்டானை நட்பு நாடாகக் கொள்வதில் இந்தியா பெருமைப்படுகிறது என்றார். பூட்டானின் வளர்ச்சியில் இந்தியாவும் மகிழ்ச்சியுடன் பங்காற்ற விரும்புவதாகத் தெரிவித்தார். அதன்பின் இரு நாடுகளின் தலைவர்களும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.