தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிப்ரவரி மாதம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் படிப்படியாக குறைத்துவருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப, வன்முறைகளைக் குறைக்க தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவாரத்தை நடைபெறவுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைஸ் ஷாஹீன், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கமாக ஏற்கமுடியாது என்றும் போரில் வெற்றி பெற்றவர்கள் தலிபான்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், தலிபான்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தானில் உள்ள மற்றக்குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று குறிப்பிட்ட அவர், காபூல் அரசாங்கத்தை அமெரிக்க ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என விமர்சித்துள்ளார்.
தலிபான்களின் இந்தக் கருத்து குறித்து பேசியுள்ள அந்நாட்டு அதிபர், தலிபான்கள் நேரத்தை வீணடிப்பதாகவும் பொருத்தமற்ற காரணங்களைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். தலிபான்கள் இயக்கத்தைச் சேர்ந்த மிக முக்கியமான 400 சிறை கைதிகளை விடுவிப்பதற்கு அந்நாட்டு அரசு இசைவு தெரிவித்தையடுத்து இந்த கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 400 தலிபான் கைதிகளை விடுவிக்க தயாராகும் ஆப்கான்!