உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பாதிப்பால் இதுவரை 210-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 32 லட்சத்து 20 ஆயிரத்து 970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 28 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய இந்தக் கொடிய வைரஸ், கடந்த ஒருமாத காலமாக பாகிஸ்தானில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.
பாகிஸ்தானில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 15 ஆயிரத்து 759 பேர் பாதிக்கப்பட்டும், 346 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், பாகிஸ்தான் அரசு பன்னாட்டு உதவிகளை கோரி வருகிறது. தொடர்ந்து ஆசிய வங்கி, பன்னாட்டு நிதி மையம் உள்ளிட்டவற்றின் உதவிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு முன்னெடுத்து வரும் கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ' கோவிட் -19 பெருந்தொற்று நோயை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த பதிலுடன் எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பெரிதும் உதவியுள்ளன. மற்ற நாடுகளுக்கு கரோனா வைரஸ் ஒரே பிரச்னை என்றால், பாகிஸ்தானுக்குப் பசி, பட்டினி எனும் இரட்டை சவால் முன் நிற்கிறது.
பெருந்தொற்றுநோயைக் கடந்து, தற்போது மக்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கியப் பிரச்னையாக ஏழ்மை இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உரையாடலின்போது, கோவிட் 19 பெருந்தொற்றை எதிர்கொள்ள உதவிய பில்கேட்ஸின் குழுவினருக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நன்றி தெரிவித்துள்ளார்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில் கேட்ஸின் போலியோ ஊழியக் குழுக்கள், கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்ள பாகிஸ்தான் சுகாதார ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து வருவது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : போரிஸ் ஜான்சன் - கேரி ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது!