சீனாவில் பெய்துவரும் பலத்தமழை காரணமாக அந்நாட்டின் மத்திய, தென் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குவாங்ஜி, ஹூனான், குவாங்டுவாங் மாகாணங்களில் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 2ஆம் தேதிமுதல் இதுவரை இரண்டு லட்சத்து 28 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் காரணமாக ஆயிரம் வீடுகள் நாசமானதாகவும், ரூ.3.7 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
குவாங்ஜி, ஹூனான் மாகாணங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பருவமழை காரணமாக ஆண்டுதோறும் சீனாவின் தென்பகுதி ஆறுகளான யாங்ஜி, பெர்ல் ஆகியவற்றில் பெருவெள்ளம் ஏற்படுவது வழக்கம். இதனால் ஏற்படும் பேரிடர்களைத் தவிர்க்க அவ்வாறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன.
1998ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் இரண்டு ஆயிரம் பேர் உயிர் இழந்தனர், 30 லட்சம் வீடுகள் சேதமடைந்தன.
இதையும் படிங்க : அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸின் சிலைக்கு தீ வைப்பு!