ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் கொண்டுவந்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனிடையே, சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்றும், காஷ்மீர் மக்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் அங்கு வாழும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும் கூறி பாகிஸ்தான், சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், ஆசாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரில் வாழும் மக்கள் இந்தியாவின் சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக எல்லைக்கோட்டின் அருகே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டமானது ஜம்மு - காஷ்மீர் சுதந்திர முன்னணி என்ற அமைப்பு சார்பில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆசாத் காஷ்மீரின் தலைநகரான முஸாராபாத்தில் போராட்டக்காரர்கள் திரண்டு அங்கிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு வரை பேரணியாகச் செல்லவுள்ளனர். மேலும், எல்லைக்கோட்டைத் தாண்டி ஸ்ரீநகர் வரை செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
"எல்லைக்கோட்டைத் தாண்டி காஷ்மீருக்குள் நுழைய எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதுமட்டுமின்றி இரண்டு காஷ்மீருக்குள்ளும் மக்கள் சுதந்திரமாக சென்றுவராலாம் என ஐநா தீர்மானத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது" என ஜம்மு-காஷ்மீர் சுதந்திர முன்னணியின் செய்தித் தொடர்பாளர் ரஃபிக் கூறியுள்ளார்.