பிரிட்டிஷ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து பெற்ற பிராந்தியமாக ஹாங்காங் விளங்கிவருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகைசெய்யும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை, சீன அரசு நிரந்தரமாக திரும்பப்பெற்று, தங்களின் ஜனநாயக உரிமையை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாங்காங் மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ஹாங்காங்கின் வுன் டாங் (Kwun Tong) பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இதையடுத்து, 29 பேரை கைது செய்த ஹாங்காங் காவல் துறையினர், அவர்கள் மீது சட்டவிரோத கூட்டம், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது, பணியிலிருந்த காவல்துறையினரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.