சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட ஹாங்காங்கில் நீண்ட நாள்களாக மக்களாட்சிக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஹாங்காங் புதிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், வரும் செப்டம்பர் மாதம் பெய்ஜிங்கில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், மக்களாட்சி ஆதரவு வேட்பாளர் ஜோசுவா வோங், ஜனநாயக சார்பு முகாமைச் சேர்ந்தவர்கள் உள்பட12 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வேட்புமனுவை பெய்ஜிங் அலுவலர்கள் தகுதி நீக்கம் செய்தனர்.
இதையடுத்து, “அரசுஅலுவலர்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்த தவறிவிட்டதாகவும், ஹாங்காங் மற்றும் பெய்ஜிங்கிற்கு விசுவாசத்தை உறுதிபடுத்த தவறியதாகவும்” தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், வோங் மற்றும் பல ஜனநாயக சார்பு வேட்பாளர்கள் இந்த வார தொடக்கத்தில், அரசு தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பெய்ஜிங்கில் அமல்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், எதிர்க்கட்சிகள் எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பிருந்தது. ஆனால், இவர்களது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், ஆட்சியமைக்கும் தகுதியை இழந்துள்ளனர்.