கராச்சி: பாகிஸ்தானில் 31 வயதான இந்து பத்திரிகையாளர் சிந்து மாகாணத்தில் ஒரு முடிதிருத்தும் கடையிலிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் மார்ச் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அஜய் லால்வானி, சுக்கூர் நகரில் முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களிலும், ஒரு காரிலும் வந்து துப்பாக்கிக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். லால்வானி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது தந்தை திலீப் குமார், தனது குடும்பத்திற்கு எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கொலை தனிப்பட்ட விரோதத்தினால் ஏற்பட்டது என்று காவல் துறையினர் கூறியதை அவர் நிராகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களுக்கு, மூன்று நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொலைக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானின் தேசிய சட்டப்பேரவையில் (MNA) இந்து உறுப்பினரான லால் சந்த் மல்ஹி 'இது மிகுந்த கவலைக்குரிய விஷயம்' என்றும் கூறியுள்ளார்.
சிந்துவின் சலே பாட் என்ற இடத்தில் மற்றொரு பத்திரிகையாளரான அஜய் குமார் கொல்லப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தவர், சிந்துவில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர் என்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்றார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் காவல் துறை இதுபோன்ற சம்பவங்களில் தீவிரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
லால்வானி கொல்லப்பட்டதை எதிர்த்து ஊடகவியலாளர்களின் குழு ஒன்று எதிர்ப்புத் தெரிவித்து, அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு அணிவகுப்பு நடத்தினர். இந்தச் சம்பவத்திற்கு சுக்கூர் காவல் துறையே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தச் சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட கொலை என்று அவர்கள் கூறினர்.
உள்ளூர் வர்த்தகர்களும் இந்தக் கொலைக்கு எதிராக வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPI), அமெரிக்க அமைப்பானது, சிந்து மாகாணத்தில் உள்ள அலுவலர்கள் உடனடியாக நம்பகமான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கொலைக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா உறுதி!