பாகிஸ்தானின் நவாப்ஷா மாவட்டத்திலுள்ள சிந்து பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் பரேல்வி கொள்கைகளைப் பின்பற்றும் ஜமாஅத் அஹ்லே சுன்னத்தின் தலைவர் முன்னிலையில், இந்து தம்பதியினர் நேற்று கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மதமாற்றம் நடைபெற்ற பின்னர் அந்தத் தம்பதியினருக்கு பணமும் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில காலங்களாக பாகிஸ்தானில் மத ரீதியிலான தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும் நடைபெற்றுவருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும், 12 முதல் 28 வயதுடைய ஆயிரம் (குறைந்தபட்சம்) சிந்தி இந்துப் பெண்களைக் கடத்தி, அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து அவர்களுக்கு இஸ்லாமிய ஆணுடன் திருமணம்செய்து வைத்துவரும் பழக்கம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட சிந்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பல சந்தர்ப்பங்களில் நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்திருப்பினும், அச்சமூகங்கள் மீது பரவலான தாக்குதலை நடத்திவந்து கொண்டுதான் இருக்கிறது.
இஸ்லாமாபாத்தில், சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், அகமதியாக்கள், ஷியாக்கள் உள்ளிட்டோரை கொலைசெய்தல், கடத்தல், பாலியல் வல்லுறவு, இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மாற்றுதல் எனத் தொடர்ந்து வன்முறைகளைக் கட்டவிழ்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணப்பெண்ணைக் கடத்தி கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்!