ட்விட்டர் உபயோகப்படுத்திய ஒருவர் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி ஹேஷ்டேக்(#) என்ற ஒன்றை ட்விட்டருக்கு பரிந்துரை செய்தார். ஹேஷ்டேக்கை ட்விட்டர் உபயோகப்படுத்தினால் செய்தி பரிமாற்றத்திற்கு மிக முக்கியமாக இருக்கும் என்று கூறவும் அப்போது தொடங்கியது #hashtag கலாசாரம். அதை நினைவுகூரும் வகையில் இன்று ஹேஷ்டேக் தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக சமூக வலைதளத்தை உபயோகப்படுத்துபவர்கள் குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்டதையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ட்விட்டரில் வாரத்திற்கு ஒரு முறை நெட்டிசன்களால் ஏதோ ஒன்று ட்ரெண்டாகிவிடும். ட்ரெண்ட் என்னும் வார்த்தைக்கு தலைவன் ஹேஷ்டேக் தான். ஹேஷ்டேக் உபயோகப்படுத்தி பேச்சு வார்த்தையில் ஏதோ ஒன்றை இணைத்துவிட்டு அதனை ட்ரெண்டாக்குகின்றனர் நெட்டிசன்கள்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது, சமீபத்தில் ட்ரெண்டான ஹேஷ்டேக் சேவ் நேசமணி(#savenesamani). இந்த வார்த்தை சாதாரணமாக ஒரு பொறியாளரால், ட்விட்டரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரே இரவில் ட்ரெண்டாகியது பலருக்கும் தெரிந்த ஒன்றே. இதேபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ஹேஷ்டேக் மூலம் சேலஞ்ச்களையும் இறக்குகின்றனர் நெட்டிசன்கள். அவை ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கீகீ சேலஞ்ச், பாட்டில் கேப் சேலஞ்ச் என்று அதன் பட்டியல் நீளும்.
ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் கூட, இந்த அளவிற்கு ட்ரெண்டாகிறதா நாம் உருவாக்கியது என்று எதிர்பார்த்திருக்கமாட்டார். அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்களிடையே சென்றடைந்திருக்கும் அந்த தகவல். ஹேஷ்டேக் என்றது உருவான பிறகு பலருக்கும் தெரியாத விஷயங்கள் தெரியத் தொடங்கியது. இது உருவாக்கப்பட்ட நோக்கம் நன்மை பயக்கும்படி இருந்தாலும், மற்றொரு பக்கத்தில் இதில் தீமைகள் இல்லாமல் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் சிலர் யாரோ எதையோ உருவாக்கியதை, மற்றொருவர் ட்ரெண்டாக்கி விடுவது சாதாரணமாகிவிட்டது. இது குறித்து பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். இன்றும் விமர்சித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஹேஷ்டேக் தினம் என்று கூறப்படுவதால் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜூன் 30ஆம் தேதி வரை ட்விட்டரில் ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்டான பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் அஜித் படம் 'விஸ்வாசம்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 'மக்களவைத் தேர்தல் 2019', 'கிரிக்கெட் உலகக் கோப்பை 2019', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி', 'நியூ ப்ரோஃபைல் பிக்' ஆகியவையும் அடுத்தடுத்த இடங்களை ஹேஷ்டேக் மூலம் பெற்றிருக்கின்றன.
பலராலும் விரும்பப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு நான்கு கோடுகள் மூலம் உலகத்திற்கே ஒரு விஷயத்தை தெரியப்படுத்தும் ஹேஷ்டேக்கிற்கே இன்று #ஹேஷ்டேக்தினம் கொண்டாடி, மக்கள் தங்கள் அன்பைத் தெரிவிக்கின்றனர் என்பது வரவேற்கப்படக்கூடிய ஒன்றே!