ராணுவத் தளபதி பிபின் ராவத் ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார்.
இப்பயணத்தின் முக்கியப் பகுதியாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலியை சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாட்டிற்கும் இடையே நிலவிவரும் நெடுங்கால நட்புறவு குறித்து தளபதி பிபின் ராவத் பேசினார். மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், புத்துயிர் பெறச்செய்யவும் இருநாட்டு பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டுவரும் கூட்டு முயற்சிகளையும் வரவேற்றார்.
முன்னதாக, மாலத்தீவு பாதுகாப்புப் படை தலைவர் மஜேர் ஜெனரல் அப்துல்லா ஷைமாலை சந்தித்து ராணுவ வாகனங்கள், பல்வேறு ராணுவ பொருட்களை வழங்கிய தளபதி பிபின் ராவத், பாதுகாப்பு குறித்து அவருடன் கலந்துரையாடினார்.
இப்பயணத்தின் போது, மாலத்தீவு பாதுகாப்புத் துறை அமைச்சர், மாலத்தீவுக்கான இந்தியத் தூதர் சன்ஜெய் சுதிர் ஆகியோரையும் பிபின் ராவத் சந்தித்துப் பேசினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மையப்புள்ளியாக விளங்கும் மாலத்தீவுக்கு இந்தியாவில் எப்போதும் முக்கியத்துவம் உண்டு.