மியான்மரில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இச்சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்தது. இதனால், அந்நாட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்துள்ளது. ராணுவம் கையில் மியான்மர் உள்ளது பெரும் சலசலப்பை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, விமானப்படையினருக்கு அந்நாட்டு ராணுவம் அனுப்பியுள்ள அறிக்கையில், " உரிய அனுமதியின்றி எந்த ஒரு விமானமும் நாட்டிலிருந்து வெளியே போக கூடாது. அதே போல், விமானங்கள் மியான்மருக்குள் நுழையவும் தடை விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
உள்ளூர் ஊடகங்கள் செய்தியின்படி, உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் அனுமதியின்றி புறப்படவும், நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து காரணமாக, வரும் மே 31ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.