தெற்கு ஆசிய நாடான இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு அதிகளவில் இருந்துவருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு காவல்துறை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட பெரமுல்லே சமீரா-வை வடக்கு கொழும்பின் வட்டாலாவில் இருப்பதாக சிறப்பு பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு பாதுகாப்புப் படையினர் 106 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்ததோடு, பெரமுல்லே சமீரா உள்ளிட்ட அவரது கூட்டணிகள் மூன்று பேரை கைது செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி, வட்டாலாவின் ஹெகிட்டாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டது பெரமுல்லே சமீரா என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அவர்கள் நான்கு பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையின் நிழல் உலக தாதாவான கிம்புலா எல்லே குனு-வின் கூட்டணிகள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.