1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக நாட்டின் தேடப்படும் குற்றவாளியாக அறியப்படுபவர் தாவூத் இப்ராஹிம். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்க இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் முறையிட்டது. ஆனால், தாவூத் இப்ராஹிமுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பான கருத்துகளை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இருப்பினும், இஸ்லாமாபாத்தால் அனுமதிக்கப்பட்ட 88 பயங்கரவாதிகளின் பட்டியலுடன் தாவூத் இப்ராஹிமின் இருப்பிடத்தை பாகிஸ்தான் அரசாங்கம் ஆவணமாக சமீபத்தில் வெளியிட்டது. அதில் அவர் கராச்சியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் ஒருபோதும் கரீபியன் தீவின் குடிமகனாக இருந்ததில்லை என டொமினிகா அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாவூத் இப்ராஹிம் கஸ்கர் முதலீட்டு திட்டத்தின் மூலமாகவோ, குடியுரிமை மூலமாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ டொமினிகாவின் குடிமகன் அல்ல. இது தொடர்பாக எந்தவொரு ஊடகத்திலிருந்தும், தனி நபரிடமிருந்தும் வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை” எனத் தெரிவித்திருந்தது.