நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு, நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெறுவது இதுவே முதல்முறையாகும்.
ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 விழுக்காடு வாக்குகள் பெற்ற நிலையில், கன்சர்வேட்டிவ் தேசியக் கட்சி 27 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு, இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்தது. இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிலாளர் கட்சி முதன்முறையாக தனித்து ஆட்சி அமைக்கவுள்ளது. இதனையொட்டி ஜெசிந்தாவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (அக்.18) பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா ஜெசிந்தாவுக்கு இன்று (அக்.19) எழுதியுள்ள கடிதத்தில், "இம்மாதிரியான இக்கட்டான சவால்கள் நிறைந்த சூழ்நிலையில், உங்களின் துணிவு, அறிவாற்றல், தலைமைப்பண்பு ஆகியவற்றை கண்டு நான் வியக்கிறேன்.
துயரம் சூழ்ந்திருக்கும் நிலையிலும், மற்றவர்களிடையே அமைதியாகவும் இரக்க குணத்தோடும் பண்பாகவும் நடந்து கொண்டதை நான் பாராட்ட விரும்புகிறேன். கடந்த காலங்களில், அழகு நிறைந்த உங்கள் நாட்டிற்கு பலமுறை வந்துள்ளேன். அப்போது, நியூசிலாந்து நாட்டு மக்களின் அரவணைப்பைக் கண்டு நெகிழ்ந்தேன். மனிதநேயம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கச் சென்றபோது, மக்கள் காட்டிய ஆர்வத்தால் ஊக்கமடைந்தேன்.
எதிர்காலத்தில் நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஜெசிந்தாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் திடீர் ஆய்வு!