இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் காரணமாக நாட்டின் சில மாவட்டங்களுக்கு பெரும் ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு வீசிய சித்ர் என்ற சூறாவளியால் மூன்றாயிரத்து 500 பேர் உயிரிழந்தனர்.
வங்க தேச கடற்கரையிலிருந்து 400 கி.மீ., தூரத்திற்குள் நகர்ந்து வரும் சூறைக்காற்று இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையைக் கடந்த பின்னர் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய அவசரகால மீட்பு, நிவாரணம் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்காக பங்களாதேஷ் கடற்படை 25 கப்பல்களை அனுப்பியுள்ளது. இரண்டு கடல் ரோந்து விமானங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் வங்காள விரிகுடா மற்றும் கடலோர மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளன. மேலும், மீட்புப் பணிகளுக்காக ராணுவம் 71 மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளது.
இந்த ஆம்பன் புயல் கடந்த 1999ஆம் ஆண்டிற்கு பிறகு வங்க தேசத்தில் வீசவுள்ள அதி பயங்கர புயல் என்று உலகின் முன்னணி புயல் கண்காணிப்பு மையமான அக்யூவெதர் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; கடலோரப் பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று