கரோனா தொற்றின் தாக்கம் இந்தாண்டு மார்ச் முதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இத்தொற்றுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களுக்கு முயன்றுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி கரோனாவுக்கு ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இருப்பினும், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முழுமையாக முடிவடையாமல், தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிப்பது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று ஆராய்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளாத ரஷ்யா, ஒருபுறம் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, மறுபுறம் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளை ஆரம்பித்தது. அதன்படி, சுமார் 40 ஆயிரம் பேர் இந்த மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ரஷ்யாவின் உயர்மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தடுப்பு மருந்தை உருவாக்கிய கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் துணை ஆராய்ச்சி இயக்குநர் டெனிஸ் லோகுனோவ் கூறுகையில், "சுமார் 40 பேர் இந்த மூன்றாம் கட்ட சோதனையில் உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 30 ஆயிரம் பேருக்கு அசல் கரோனா தடுப்பு மருந்தும், 10 ஆயிரம் பேருக்கு விளைவுகளற்ற தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டது.
தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி வழங்கப்பட்டதா அல்லது இந்த போலி தடுப்பு மருந்து வழங்கப்பட்டதா என்பது ஆய்வின் இறுதியிலேயே தெரியவரும்" என்றார்.
இதையும் படிங்க: ஹேக் செய்யப்பட்ட ட்ரம்பின் இணையதளம்!